Saturday, January 21, 2012

மகா பெரியவா -2

21 ஜனவரி 2012

பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது ஓரிக்கையில் இருக்கும்போது சுந்தரராமன்(மடத்தில் பெரியவாளுக்கு சேவை செய்யும் சிறுவன் ), பூணூல் இல்லாமல் இருந்ததை மகான் கவனித்து விட்டார்.

நீ ஏன் இன்னும் உபநயனம் செய்து கொள்ளவில்லை?" என்று மகான் கேட்டார்.

"அதற்குத் தேவையான பணம் அப்பாவிடம் இல்லை போலிருக்கிறது" என்று சுந்தரராமன் சொல்ல, சில நிமிடங்கள் மகான் மௌனமாக இருந்துவிட்டு பிறகு ஒரு பிரசங்கமே செய்துவிட்டார் .

"இன்றைய பிராமண சங்கம், எனக்கு கொஞ்சமும் திருப்தியளிக்காததாக உள்ளது. உபநயனம் போன்ற எளிமையான, ஆனால் அதிமுக்கியமான சமஸ்காரங்களைக் கூட ஆடம்பர விழாவாக்கி விடுகிறார்கள். பட்டுப்புடவைகள், விருந்து, செலவு என்று பணத்தை வாரி வீணாக இறைக்கிறார்கள். இதனால் சம்ஸ்காரத்தின் முக்கிய அம்சத்தையே மறந்து விடுகிறார்கள். எனக்குச் சம்மதமே இல்லாவிட்டாலும் சரி, பணக்காரன் வேண்டுமானால் தன் அந்தஸ்தைக் காட்டிக் கொள்ளல் இஷ்டத்திற்கு செலவு செய்யட்டும் . ஏழை ஜனங்கள் இதை பார்த்து 'காப்பி' அடிக்கும்போது தான் கஷ்டம் வருகிறது. 'உபநயனம்' போன்ற சிறு விழாக்களுக்குக் கூட தங்களது சக்திக்கு மீறி கடன் வாங்குகிறார்கள். இந்தச் சிறுவிழா நடத்த சிறு தொகையே போதும். . திருமணம் நிச்சயமாகும்வரை கூட பிள்ளைகளுக்குப் பூணூல் போடுவதில்லை. கல்யாண சுப முகூர்த்தங்களோ இன்னும் மோசம் . ஆயிரமாயிரமாக செலவுகள் செய்து ஆடம்பர விழாக்களாகச் செய்து வருகிறார்கள். வரதட்சணை கொடுமை பல பெண்களின் வாழ்க்கையே பாதித்துள்ளது. என்னுடைய உபதேசங்கள் எதுவுமே இந்த சமூகக் கொடுமைகளை கொஞ்சமும் மாற்றியதாகவே தெரியவில்லை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்று சொல்லிவிட்டு மகான் சில நிமிடங்கள் மௌனத்தில் ஆழ்ந்தார்.

பிறகு தொடர்ந்தார்:

"மற்றவர்களைப் பற்றி நான் ஏன் பேசவேண்டும்? நீ ஏன் என் எதிரில் திறந்த மார்புடன் நிற்கிறாய்? இதை எப்படி நான் கவனிக்காமல் போனேன்?" சுந்தரராமனிடம் அடுத்த கட்டளையைப் பிறப்பித்தார், "உடனே போய் பஞ்சாங்கத்தை எடுத்துவா?, அதோடு உன் தோப்பனாரையும் இங்கே அழைச்சுண்டு வா."

பஞ்சாங்கம் அவர் கையில் தரப்பட்டது சுந்தரராமன் தந்தையும் அங்கே வந்தார்

பஞ்சாங்கத்தை மிகவும் கவனித்த பெரியவா " அடுத்த வியாழக்கிழமை நாள் மிகவும் நன்றாக இருக்கிறது அன்றே உன் பையனின் உபனயனத்தை நடத்திவிடு என்று பணித்துவிட்டார்

தந்தை எதோ சொல்ல வாயெடுக்க

"பணம் இல்லை பந்துக்களை அழைக்க அவகாசம் இல்லை என்றெல்லாம் சொல்லாதே, மடத்து சாஸ்திரிகளுக்கு உன் சக்திக்கேற்றவாறு பணம் கொடுத்தால் உபனயனத்தை நடத்திவிடுவார் , மடத்து உக்ராணத்தில் தேவையான சாமான்கள் இருக்கின்றன நீ பய்யன் அவன் தாயார் தவிர வேறு யாரும் இந்த சுபகாரியத்திர்க்கு அவசியம் இல்லை" என்று மகான் தீர்க்கமாகச் சொல்லிவிட்டார்


ஆனால் சுந்தரராமனின் தந்தை விடாப்பிடியாக "அடுத்த வியாழனன்று பெரியவா உத்திரவுப்படி நான் நைவேத்யம் தயாரிக்கும் கைங்கர்யம் செய்யவேண்டியுள்ளதே" என்று கூற, மகான் "அன்று நீ தவறாமல் நைவேத்திய கைங்கர்யம் செய்யப்போகிறாய் அதே தினம் உன் குமாரனுக்கும் உபநயனம் செய்யப்போகிறாய்" என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

அவர் மேலும் தொடர்ந்து சொன்னார்:

"உபநயனம் இதே இடத்தில் கோசாலையில் நடக்க வேண்டும் ஆனால் பசுக்களுக்கு எந்த இடைஞ்சலும் இருக்கக் கூடாது நீ பூர்வாங்க வேலைகளை விடியற்காலையிலேயே ஆரமிச்சுடு , பிறகு சந்திரமௌலீஸ்வரருக்கு நைவேத்யமும் தயார் செய்துவிடு. நான் பூஜையை ஆரம்பிக்கும் நேரத்தில் இங்கே நடக்கும் வைதீக கர்மாக்களிலும் வந்து கலந்து கொள். நான் சந்திரமௌலீஸ்வரருக்கு சந்தனாபிஷேகம் செய்யும் அதே நேரத்தில் அங்கே உபநயன முகூர்த்தம் நடைபெறவேண்டும். இப்போது உன் வேலையைப்பார்", என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டார்

மகான் ஒரு விஷயத்தில் முடிவு எடுத்த பின் அதை மாற்ற யாரால் இயலும்? மேலும் சுந்தரராமனின் தந்தை மடத்து ஊழியர் அவரால் எப்படி மறுப்பு சொல்லமுடியும்

சுந்தரராமன் தான் தாயிடம் சென்று இந்த விஷயத்தைச் சொன்னபோது, அந்த மாதரசி மகிழ்ச்சியடைந்தாலும் உறவினர்களை அழைக்க அவகாசம் இல்லையே , கையில் பணமில்லையே என்கிற மனக்கவலை எழுந்தது.

ஒரு காலத்தில் பணத்தின் அருமை தெரியாமல் வாரி இறைத்ததின் விளைவாகத்தான் அக்குடும்பத்திற்கு வறுமை நிலை வந்தது

அழைப்பிதழ்கள், உறவினர் கூட்டம், புத்தாடைகள் இவை ஏதுமின்றி உபநயனம் நன்றாகவே நடந்து கொண்டிருந்தது. சந்திரமௌலீஸ்வரருக்கு சந்தன அபிஷேகம் நடந்து கொண்டிருந்தத நேரம் ஒரு கணவன் மனைவி கையில் பெரிய மூங்கில் தட்டுடன் அங்கே வந்தார்கள். இருவர் கையிலும் இரண்டு தட்டுகள்.மடத்து நாதஸ்வர வித்வான்கள் இனிமையான கல்யாணி ராக கீர்த்தனையை வாசித்துக் கொண்டு இருந்தனர் . வந்தவர்கள் நங்கவரம் சுந்தராம அய்யரும் அவரது பத்னியும் என்று இவர்களை அடையாளம் கண்டுகொண்டனர் , அவர்கள் இருவரையும் அங்கு பார்த்ததில் எல்லோருக்கும் வியப்பு , சாஸ்த்ரிகளும் மேற்கொண்டு மந்திரம் சொல்வதை அப்படியே நிறுத்திவிட்டார் .

அதையெல்லாம் கவனித்த சுந்தரம் அய்யர் மெதுவான குரலில் பேசலானார் " மகா பெரியவா எங்களண்டை" நாளை காலை, எனக்கு மிகவும் பிரியமான ஒரு பையனுக்கு நான் இங்கே நடத்தும் பூணூல் கல்யாணத்திற்கு எனக்கு யார் உதவி செய்ய வருவார்கள் என்று எதிர்பார்த்தேன் . நீங்கள் சரியான நேரத்திற்கு வந்து இருக்கிறீர்கள் எனக்கு உதவ முடியுமா?" என்று கேட்டுவிட்டார்

" இது எங்களுக்கு கிடைத்த பாக்யம் என்ன செய்ய வேண்டும் என்று மகாபெரியவா சொன்னா செய்யக் காத்திருக்கிறோம்" என்று கூறினோம். " மகா பெரியவா புன்னகையோடு ஆசிவழங்கவே, கடைகள் மூடுவதற்கு முன்பே கடைவீதிக்கு சென்று கூடுமானவரை சாமான்களை சேகரித்து வந்தோம்" அவர் மேலும் சொன்னார்:" நாங்கள் மகிழ்ச்சியில் திளைத்தோம்" என்று. சுந்தராமனின் குடும்பத்தினர் முகம் மலர வெளியில் சொல்ல முடியாமல் பேசமுடியாமல் திணறிக்கொண்டு இருக்கா " தயவு செய்து இவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டும்" என்று அந்த தம்பதியர் மூங்கில் தட்டுகளை அவர்கள் முன் வைத்தார்கள் .

உபனயனத்திர்க்கு வேண்டிய புதிய துணிகள் மாலைகள் பழம் வெற்றிலைபாக்கு எல்லாமே அங்கு வந்தன , அதனால் மகான் சந்திரமௌலீஸ்வரருக்கு சந்தனாபிஷேகம் நடக்கும் அதே நேரத்தில் சுந்தரராமனின் உபநயனமும் நடந்தது .

மகா பெரியவா முன்பு மடத்திலேயே உபநயனம் செய்துகொண்ட சுந்தரராமன் மிகவும் பெரிய அதிர்ஷ்டசாலி என்று எல்லோரும் வாழ்த்தினர் .

பூஜையை முடித்துக்கொண்ட மகானை, குடும்பமே கால்களில் விழுந்து நமஸ்கரிக்க, மகான் ஒரே ஒரு பழத்தை மட்டும் எடுத்து சுந்தராமனின் கையில் கொடுக்க பிறகு சுந்தரராமனின் தாயாரைப் பார்த்து "உன் மகனின் பூணூல் கல்யாணம் விமரிசையாக நடந்துவிட்டதா? என்று கேட்க, அந்த மாதரசியின் கண்களில் நீர் பெருக்கெடுக்க கைகள் உயர்ந்து மகானை வணங்கின. அன்று மடத்தில் எல்லோருக்கும் சிறப்பு சாப்பாடு

No comments: