Sunday, April 01, 2012

மகா பெரியவா- 12

வெங்கடாத்திரி அகரத்தில் மகா பெரியவா மணலில் போட்ட அட்சதையை, அவரது ஆணைப்படி சேலம் வக்கீல் ராமசாமி ஐயரும்,அவரது மனைவியும் கண்களில் ஒற்றிக் கொண்டு தங்களது மேல்வேஷ்டி மற்றும் புடவைத் தலைப்பில் சர்வ ஜாக்கிரதையாக முடிந்து வைத்துக் கொண்டனர்.

எல்லோருக்கும் அவரவர் மேல்வஸ்திரத்திலோ,புடவைத் தலைப்பிலோ விழுமாறு அட்சதையைப் போட்ட மகா பெரியவா, தனக்கு மட்டும் மேல்வஸ்திரத்தில் போடாமல் ஏன் தரையில் போட்டார் என்று மருகிப் போனார் ராமசாமி ஐயர். எவ்வளவு முயன்றும்,யோசித்தும் இதற்கான விடை அவருக்குக் கிடைக்கவில்லை. மகான்களின் இயல்பை மனிதர்கள் அறிய முடியுமா?

சேலம் திரும்புவதற்கு ராமசாமி ஐயருக்கு மகா பெரியவா உத்தரவு கொடுத்த பிறகு,வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து மனைவியுடன் வண்டியில் புறப்பட்டார்.சுகமான காற்று உடலை வருடிக் கொண்டிருந்தாலும், ராமசாமி ஐயரின் மனம், மணலில் போட்ட அட்சதையிலேயே இருந்தது.

ஆனால், சேலத்துக்கு வந்ததும் இந்த நிகழ்வு அன்றே அவரது நினைவில் இருந்து விடுபட்டது. காரணம் - வழக்கமான அவரது வக்கீல் பணிகள். இயல்பு வேலைகளில் பிஸியானார் ராமசாமி ஐயர்.

வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து சேலத்துக்கு வந்த இரண்டாம் நாள் மதியம்... அன்று ஏதோ முக்கிய பணிக்காக வீட்டில் இருந்த ராமசாமி ஐயருக்கு, கனமான பதிவுத் தபால் ஒன்று வந்தது. அனுப்பியவர் முகவரியைப் பார்த்தார். அதில், அவரது மாமனாரின் பெயரும் விலாசமும் குறிப்பிடப்பட்டிருந்தது. சாதாரணமாக ஒரு இன்லேண்ட் கடிதம் எழுதி, சம்பிரதாயத்துக்கு விசாரிப்பவர், பதிவுத் தபாலில் என்ன அனுப்பி இருப்பார் என்கிற ஆவலுடன், மனைவியையும் உடன் வைத்துக் கொண்டு பிரித்தார்.

உள்ளே - ரெஜிஸ்திரார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரம் ஒன்று இருந்தது. ஒரு கணம் குழம்பியவர்,பத்திரத்தில் உள்ள வாசகங்களை முழுக்கப் படித்து விட்டுப் பிரமித்துப் போனார். பத்திரத்துடன் இருந்த ஒரு கடிதத்தில், ராமசாமியின் மாமனார் தன் கைப்பட எழுதி இருந்தார்: ‘வக்கீல் தொழிலில் சிறந்து விளங்கினாலும், சொந்தமாக நில புலன் எதுவும் இல்லாமல் இருந்து வரும் உங்களுக்கு - உங்கள் பெயரிலேயே ஏதாவது நிலம் எழுதி வைக்கலாம் என்று திடீரெனத் தோன்றியது. அதன் வெளிப்பாடுதான், இத்துடன் இணைத்திருக்கும் பத்திரம். தங்கள் பெயருக்குப் பதிவு செய்து, சில ஏக்கர் நன்செய் நிலங்களை எழுதி வைத்திருக்கிறேன். இறைவனின் அருளுடனும், தாங்கள் வணங்கும் மகா பெரியவா ஆசியுடனும் இதை நல்லபடியாக வைத்துக் கொண்டு சுபிட்சமாக வாழுங்கள்.’

ராமசாமி ஐயருக்கும் அவரது மனைவிக்கும் ஏக சந்தோஷம்.இருக்காதா பின்னே!எதிர்பார்க்காத நேரத்தில் இப்படி ஒரு சொத்து - அதுவும் நல்ல நன்செய் நிலம் - தானாகக் கைக்கு வந்து சேர்ந்தால், மனம் மகிழ்ச்சியில் துள்ளாதா? பரவசப்பட்டுப் போனார்கள் இருவரும்.

மாமனாரிடம் இருந்து தானமாக வந்த நில புலன்களில் ஏற்கெனவே பயிர்கள் நன்றாக விளைந்து கொண்டிருந்தன. மகசூலும் நன்றாக இருந்தது. அதனால், இதைப் பராமரிப்பதில் பெரிதாக ஒன்றும் சிரமம் இல்லை ராமசாமி ஐயருக்கு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் நேரில் போய் நல்ல முறையில் பார்த்து வந்து கொண்டிருந்தார்.

இதற்கிடையில் வெங்கடாத்திரி அகரத்தில் மகா பெரியவா,அட்சதையை ஏன் தரையில் போட்டார் என்கிற சம்பவத்தை ஏறக்குறைய மறந்தே போயிருந்தார் ராமசாமி ஐயர். ஆனால், அப்படி அட்சதை போட்டு ஆசி புரிந்த மகா பெரியவா இதை மறப்பாரா?

நில புலன்கள் சேர்ந்தால் நிலச் சுவான்தார்தானே! இப்படி ஒரு நிலச் சுவான்தார் ஆன பிறகு, ‘இந்த நல்ல செய்தியை மகா பெரியவாளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.’ என்று எண்ணினார் ராமசாமி ஐயர்.ஒரு நாள் காஞ்சிக்குப் போய் அவரைத் தரிசிக்க ஆர்வம் கொண்டார்.அந்த நாளும் கூடிய விரைவிலேயே வாய்த்தது.

தனது நிலத்தில் இருந்து முதன் முதலாக அறுவடை ஆன நெல்லில் இருந்து,அரிசி அரைத்துக் கொண்டு,அந்த அரிசி மூட்டைகளுடன் காஞ்சிபுரம் மடத்துக்கு வந்தார் ராமசாமி ஐயர்.அந்த மூட்டைகளுள் ஒன்றில் இருந்து சில அரிசி மணிகளை எடுத்து, தன் மேல்துண்டில் முடிந்து வைத்துக் கொண்டு ஒரு குழந்தையைப் போல் மகா பெரியவா முன்னால் போய் நின்றார். உடன், அவரது மனைவியும் இருந்தார்.

“வாப்பா ராமசாமி... சேலத்துலேர்ந்து வர்றியா? இல்லே உன் வயல்லேர்ந்து நேரா இங்கே வர்றியா?” - மகா பெரியவா கேட்டதும், ராமசாமி ஐயர் வாயடைத்துப் போனார். ஏதும் பேசவில்லை. மகா பெரியவாளே தொடர்ந்தார்:“இப்பல்லாம் உன் நிலத்துல விளைஞ்ச அரிசியைத்தான் சமைச்சு சாப்பிடுறாயாமே?”

மகா பெரியவா திருவாய் மலர்ந்தருளிய மறுகணம் விதிர்விதிர்த்துப் போனார் ராமசாமி ஐயர். சட்டென்று நிதானத்துக்கு வந்து,“ஆமா பெரியவா.வெங்கடாத்திரி அகரத்துக்கு வந்து பெரியவாளைத் தரிசனம் பண்ணிட்டு ஊருக்குப் போன உடனே,என் மாமனார்கிட்டேர்ந்து பத்திரம் வந்தது. நிலமே இல்லாமல் இருந்த எனக்கு, அவராவே சில ஏக்கர்களை எழுதி சாசனம் பண்ணி, தபால்ல அனுச்சிருந்தார். அதான் பெரியவாளைப் பாத்துச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.முதல் விளைச்சல்ல வந்த சில அரிசி மூட்டைங்களையும் மடத்துக்குக் காணிக்கையா கொண்டு வந்திருக்கேன்.”

“எல்லாம் சரிதான். அன்னிக்கு உன் மேல்வஸ்திரத்துல போட வேண்டிய அட்சதையை நிலத்துல போட்டபோது குனிஞ்சு எடுக்கறப்ப, அவ்வளவு வருத்தப்பட்டியே ராமசாமி... இன்னிக்கு அதே மாதிரிதானே, இந்த அரிசியைக் கொண்டு வர்றதுக்கும் குனிஞ்சு நிமிர்ந்திருக்கே! உன் சொந்த நிலத்துல குனிஞ்சு, கதிர் அறுத்த நெல்லை அரிசி ஆக்கி, உன் மேல்வஸ்திரத்துல முடிஞ்சு வெச்சுண்டு இப்ப என்னைப் பாக்க வந்திருக்கே?! இல்லியா?” என்று சொல்லி விட்டு, இடி இடியென பெரியவா சிரித்தபோது, ராமசாமியின் கண்களில் இருந்து பொலபொலவென்று நீர் சுரந்தது. மகா பெரியவாளின் ஞான திருஷ்டியை உணர்ந்து மெய் சிலிர்த்தார். பெரியவாளின் இந்தப் பேச்சைக் கேட்ட பிறகு அவரது மனைவிக்குப் பேச்சே எழவில்லை.

மேல்வஸ்திரத்தை எடுத்துப் பிரித்து, அதில் முடிந்து வைத்திருந்த அரிசியைக் கையில் திரட்டி, மகா பெரியவாளின் முன்னால் இருந்த ஒரு பித்தளைத் தட்டில் சமர்ப்பித்தார் ராமசாமி. பிறகு, அவரது திருப்பாதங்களுக்குப் பெரிய நமஸ்காரம் செய்தார். “ஆமா பெரியவா... அன்னிக்கு நீங்க பண்ண அனுக்ரஹத்தாலதான் எனக்கு இன்னிக்கு இப்படி ஒரு சொத்து கிடைச்சிருக்கு. கூடிய சீக்கிரமே நிலம் உனக்குக் கிடைக்கப் போறதுங்கறதை சொல்லாம சொன்னேள்! அட்சதையை நிலத்துல போட்டேள். இந்த மூளைக்கு அப்ப இது எட்டலை. உங்களோட கருணைக்கும், தீட்சண்யத்துக்கும் அளவேது பெரியவா” என்று சொல்லி, முகத்தை மூடிக் கொண்டு தேம்பலானார்.

இதை அடுத்து, அந்தப் பரப்பிரம்மம், தியானத்தில் மூழ்கியது.

‘சொந்தமாக நில புலன் உனக்குக் கிடைக்கும்’ என்பதை தீர்க்க தரிசனமாக ராமசாமி ஐயருக்கு உணர்த்த விரும்பிய மகா பெரியவா, வஸ்திரத்தில் போட வேண்டிய அட்சதையைத் தரையில் போட்டதன் தாத்பர்யம் அவரைத் தவிர வேறு யாரால்தான் புரிந்து கொள்ள முடியும்?

No comments: