Sunday, April 01, 2012

மகா பெரியவா- 16

பரமசிவனின் நேத்ராக்னியில் இருந்து வந்தவரே குமாரசுவாமி. அவர் ஞானாக்னியானாலும் இதயத்தில் குளிர்ந்தவர். ஏனென்றால் ரொம்ப ஜலசம்பந்தம் உள்ளவர். சரவணம் என்ற பொய்கையில் தான், சிவதேஜஸ் முருகனாக ரூபம் கொண்டது. அம்பாளே சரவணப் பொய்கை. அப்பா நெருப்பாக இருக்க, அம்மா நீராக இருந்தாள். ஜலரூபமான கங்கையும் அவருக்கு இன்னொரு மாதா. அதனால் முருகனை "காங்கேயன்' என்று அழைத்து வழிபடுகிறோம்.

எல்லாப் பெண்களும் அவருக்கு மாதா. சஷ்டிப் பெண்களுக்கு அவர் பாலன் ஆனார். கார்த்திகைப் பெண்டிருக்குப் பிள்ளையாகக் கார்த்திகேயர் ஆனார். நட்சத்திரத்தில் ஆறாக இருப்பது கார்த்திகை. திதியில் ஆறாவது சஷ்டி. இவருக்கு ஆறுமுகம். ஆறு அட்சரம் கொண்ட சடாக்ஷரி (சரவணபவ) இவருடைய மந்திரம். மனிதர்களிடமுள்ள காமம் (பெண்ணாசை), குரோதம் (கோபம்), லோபம் ( பற்று), மோகம் (பிற ஆசை), மதம் (ஆணவம்), மாச்சர்யம் (வெறுப்பு) என்ற ஆறு பகைவர்களைக் கொன்று ஞானம் அருளும் ஆறுபடை வீரர் அவரே.

ஜொலிக்கிற ஞானாக்னியான வேலாயுதத்தை "சக்தி சக்தி' என்றே சொல்லுகிறோம். வேதமே முக்கியமாக அக்கினி வழிபாட்டு மதம் தான். அக்கினி என்ற வார்த்தையோடு தான் வேதம் ஆரம்பமாகிறது. உபா சனையில் (இறைவனை வழிபடும் முறை) ஒளபாசனம் என்னும் அக்கினி முறையே முக்கியமானது. இதற்கு சுப்பிரமணியரே அதிதேவதையாக இருக்கிறார்.

ஓம் முருகா

No comments: